Friday, December 18, 2009

ஹைக்கூ

கிழிந்துப் போன ரூபாய் நோட்டுகளிடையே
அழகான வெள்ளி நாணயம்
குழந்தையின் சிரிப்பு!!!!
***
வெறும் பாறையையும், சிரிக்கும் சிற்பமாக்கும்
சிற்பியின் கைவண்ணம்
காதல் !!!
***
விளையாட்டுத் தனமாக குழந்தை
தீட்டிய ஓவியம்
நட்பு !!!!

கார்காலம் அது!!!

என் வாழ்க்கை
வெள்ளையாய்
வெழுத்திருந்தது
காதலை என்மேல்
எழுதினான் -
கண் இமைக்கும்பொழுதில்
கவிஞனான காதலன்.
அன்றெல்லாம்,
அவன் கண்களுக்கு
தென்பட்டிருக்கவே மாட்டேன்.
இன்றெல்லாம்,
அவன் கண்களுக்குதெரிந்த-
கடவுளானேன்.

என்னை விடாமல்
பார்த்துக்கொண்டே இருப்பான்.
இடையிடையில்
சிலசொற்களை வைத்துக்கொண்டு
வார்த்தைகளை வார்த்தெடுப்பான்.
வார்த்தைகளைக்கொண்டு
எப்படி எப்படியோ
வடிவம் கொடுப்பான் -
காதலுக்கு.
வாசிக்கப்படும்போது
பிண்ணனி இசையாக,
அங்கொன்று இங்கொன்றுமாய்
ஒன்றிரண்டு முத்தங்கள்.

வசந்தம்
கோடை
மழை
குளிர்
அனுபவித்து,
அவன் காதல்சுமந்து,
அவள் இல்லம்
நுழைந்தேன்.

அவன் திரித்த
காதலை,
நான்
விரித்து காட்டி
"ஏய் காதலி!
இதோ பார்,
உன் காதலன்
உவமைகளுக்குள்
உணர்ச்சிகளை
ஒளித்துவைத்திருக்கிறான்" என்பேன்.

என்மேல்
அவன் எழுதிவிட்ட
காதல் வார்த்தைகள்
அவள் வெட்கத்தில்
வர்ணம் பூசிக்கொள்ளும்.

அவள் என்னைப் படித்த
ஆயிரம் முறைக்கு
ஆயிரம் அர்த்தப்படும்
அந்த நான்கு ஐந்து வார்த்தைகள்.

காதலுக்காககாலம் களித்த
கடந்தகால கார்காலம் அது!!!
- நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு
காலாவதியான காதல் கடிதங்கள் நான்.

கல்லூரிச் சாலை

விழுந்தேன்,
நிமிர்ந்தேன்,
வளர்ந்தேன்,
பரவசமாய்-
அன்று,
காதலர்கள்
ஊருக்கு பயந்து,
பேசும் அவசரத்தில்
என் வேரில்
சிந்திவிட்டுப்போன
காதல் துளிகளால்.
இன்றோ,
காதலர்களால் காயப்பட்ட
காதலுக்காக,
இலைகளாய்
கண்ணீர் சிந்துகிறேன்.
தப்பிக்க முடியாதபடி காலத்தால்
என் கால்கள்
கட்டிவிடப்பட்டிருந்தன.
காதல் மறைந்துப்போன,
கல்லூரிச் சாலையில்
மொட்டையாய்ப் போன
ஆலமரத்தின் அழுகுரல்.
-ரம்யா

ஒரு தலைக் காதல்

மூலையில் ஒழிந்துக்கொண்டிருந்த
என்னை
தேடிப்பிடித்து
உயிர் கொடுத்து
கரம்பிடித்து
கவிதை வடிக்கச்சொன்னாய்-
உன் காதலிக்காக.
நானோ
என்னையே வடித்தேன்
உன்னவளிடம்
என்னை அறியாமல்.
கவிதையெழுதிய
காதல்கணங்களில்
ஒரு தலைக் காதலுடன் -
நான் மட்டும்.
-அன்புடன் எழுதுகோள்