Monday, March 15, 2010

அனுபவம்

ஒரு வார காலமாக ஒரு தொல்லைப்பேசி எண்ணிலிருந்து அழைப்புகளை துண்டித்த வண்ணம் இருந்தேன். அழைப்பவர்களும் என்னை விடுவதாய் இல்லை வேறு வேறு எண்ணிலிருந்து அழைத்துக்கொண்டே இருந்தார்கள். நேற்று அவ்வாறாக காய்கறிகள் வாங்க கடைக்கு போய்விட்டு திருப்பும் போதுதான் அந்த அழைப்பு மீண்டும்.மூளை ஓய்வில் இருந்த சமயம் கை செய்த முட்டால் தனம்.


நானும் தெரியாதது போல என்ன என்று விசாரித்தேன்.தாழ்மையுடன் அவன் கூறியது "மேடம் உங்ககிட்ட லேப்டாப் இருக்கு அதுக்கு உங்ககிட்ட பிராட்பேண்ட் இல்லை அதனால உங்களுக்கு ஏர்டெல் வழங்கும் சேவையை தருகிறோம் " என்றான் முடித்தப்படி.என்னிடம் என்ன இருக்கின்றது என்று இவர்களுக்கு எல்லாம் யார் தகவல் தருகிறார்கள் என்று குழம்பியபடி "ஆம்" என்றேன். சரி மாத கட்டணம் எல்லாம் எவ்வளவு என்று விசாரித்தப்படி இருந்தேன்.கடைசியில் நாளை அலுவலகம் வந்து சந்தியுங்கள் என்றேன்.

சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு அழைப்பு "நீங்கள் இருக்கும் காலனிக்கு வெளியே நாங்க இருக்கிரோம்" என்றனர்.என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டு எண்ணை அவர்களிடம் குடுத்தேன். வந்தனர் இருவர் நான்கு சக்கர வாகனத்தில். 2800 கட்டணம் என்று ஆரம்பித்தவர்கள் கடைசியில் 1800 ரூபாய் இரங்கி வந்து நாளை உங்களுக்கு இணைப்பு வழங்கப்படும் என்பது வரைக்கும் வந்துவிட்டார்கள். மூன்று மாத வாடகையை முன்பே செலுத்திவிட்டு வீட்டில் இணைப்பு வாங்கிவிட்டால் வேறு இடம் செல்வதாக இருந்தால் பெறும் பிரச்சனை. மாற்றல் கேட்டு காத்து இருப்பதால் ஒரு 6 மாதமாக இதோ கிடைத்துவிடும் அதோ கிடைத்துவிடும் என்று எதையும் வாங்க ஒரு சின்ன தயக்கம் வேறு.எனக்கோ ஒரு சிறு குழப்பம் நானும் யோசித்து சொல்கிறேன் என்று பல முறை கூறினேன்.

பயனில்லை. எனக்கோ போகும் இடமெல்லாம் எடுத்து செல்வதாக இருந்தாக வேண்டும். ஆனால் இவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்றே தெரியவில்லை ஒரு அரை மணி நேரம் நீயா நானா என்று விவாதம், வாசலில் நின்றுக்கொண்டு. கடைசில் வென்றது நானே.இதில் சில உண்மைகள் எனக்கே தெரியாது.

என்னிடம் மாத கடைசி பணம் இல்லை என்றேன். அதற்கு அவர்கள் "எங்களுக்கு தெரியும் வரும் வெள்ளி உங்களுக்கு சம்பளம் 35000 கிடைக்கும்" என்றார்கள்.

என்னது எனக்கு 35000 சம்பளமா ? சொல்லவே இல்ல.ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை எதாவது ஒரு 100, 200 அய்க் கிடைக்குமானு F5 அமுத்திட்டு இருக்கோம். "போங்கப்பா வேற வீடு பாருங்கனு" அனுப்பிவிட்டு அக்கவுண்டில் இருக்கும் 163 ரூபாயை நினைத்து சம்பளத்திற்கு இன்னும் இரண்டே நாள் என்று உறுதிப்படித்திக்கொண்ட எனக்கு ஏனோ வெகு நேரம் தூக்கம் வரவில்லை 35000 பற்றியே எண்ணம்.

வீக் என்ட் ஸ்பெசல்

வீக் என்ட் ஸ்பெசல்

எங்கயும் போகல, எந்த ஸ்பெசல் அக்கேசனும் இல்லை,வீட்டில் இருந்தாலும் வீக் என்ட் ஸ்பெசல் தான்.எப்பவும் போல இந்த வாரமும் வீட்டில் தான். முழு நேர தொலைக்காட்சி தரிசனம்.ஆனாலும் பகிர்ந்துக்கொள்ள சில விஷசயங்கள்.

சக்கப்போடு போட்டுட்டு இருக்கு விஜய் டிவி. கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள்ல சன் டிவி எல்லாம் தூக்கி சாப்பிட போகுது.

விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன்ல இந்த சீசனோட நடுவர்கள் கௌதமி மற்றும் ராதிகா. ஆரம்பத்தில இருந்த்து ரொம்ப "ஸ்ரிக்ட்டா" இருக்காங்க.அவங்கள பார்த்து ஒருத்தன் எப்படி அப்படி கேக்கலாம் ? அப்படிங்கிற அளவுக்கு அவங்களுக்கு அதிர்ச்சி தந்த மேட்டர் என்னனா??. பங்கு பெற்ற ஒரு பையன் "நீங்க என்னோட அம்மா மாதிரி"னு சொன்னது அரங்கயே அதிர வைத்தது. அதையும் கட் பண்ணாம போட்டு விளம்பரம் பண்ணிட்டாங்க. அவங்க அதிர்ச்சியான முகத்தைப் பார்த்து நல்லா சிரிச்சேன். காமெண்ட் கொடுத்து மொக்க வாங்குறது இதுதான் போல

அரட்டை அரங்கம் செம மொக்கை இப்போ எல்லாம். என்ன தான் இருந்தாலும் விசு சார் நடத்துற மாதிரி இல்லை. சீக்கிரமே கலை நிகழ்ச்சி யதாவது நடத்தி பிரபுதேவா-நயன், அஜித், சூரியா எல்லாரையும் கூப்பிட்டு கொஞ்சம் பரபரப்பு உண்டு பண்ணினால் சனி ஞாயிறு சன் டிவி பார்க்கலாம்.

ஜெயா டிவில சனி கிழமை இரவு ஜே-ஹிட்ஸ் ஒளிபரப்பு ஆகிறது. எல்லாமே அருமையான் பழய நடுத்திர பாடல்கள். அது ஒன்னு மட்டும் தான் இது வரைக்கும் பாக்கிற மாதிரி இருக்கு.வேற எதாவது இருக்கலாம் ஆனா அதே நேரத்தில வேற ஒரு சேனலில் இதைவிட நல்ல நிகழ்ச்சி இருக்கும்.

தமிழுக்கு முக்கியதுவம் தருவது முக்கியம் என வெளிநாட்டு தொலைக்காட்சிக்கு(STAR VIJAY) தெரிந்து இருப்பது நம்ம தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நெத்தியடி. "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு ", போன்ற நிகழ்ச்சிகள் அருமை. சிறுவர்கள் அழகாக டமில் அல்ல தமிழ் பேசுகிறார்கள்.நிகழ்ச்சி தொகுப்பு அருமை.

"வாங்க பேசலாம்" வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது பெரியார் தாசன், டில்லி கணேஷ்.இந்த வாரம் கவிஞர் சிநேகன் சிறப்பு விருந்தினர். "நல்ல பாடல்கள் நடுவில் ஐயோ போன்ற புரியாத சத்தங்கள் எதற்கு?" "நீங்க உண்மையா தமிழ் வளர்க்கத் தான் பாட்டு எழுதுறீங்களா?" "தண்ணி அடிச்சா தான் கவிதை வருமா?" இந்த மாதிரி சிரிச்சுக்கிட்டே சில பல கேள்விகள். நக்கல் நையாண்டி அருமை. குப்புசாமி அவர்கள் ஹசிலி விசிலி பாடலை பாடிய விதம் "என்னங்கடா பாடல் எழுதுறீங்கனு" கேட்ட மாதிரி இருந்தது.பத்துப்பாட்டு சரி அது என்னய்யா இந்த காலத்துல பாடல் எழுதுறவங்க "குத்துப்பாட்டு"னு ஒரு புது இலக்கிய நடை உருவாக்கி இருக்கீங்கனு ஒரு கேள்வி தான் ஹைலைட்.

எல்லாத்தை பற்றியும் பேசிட்டு " நீயா நானா " நிகழ்ச்சிய பற்றி பேசலனா கோபி கோபிப்பார். அருமையான தலைப்பு "பெண்கள் VS ஆண்கள்" ரெண்டு பக்கமும் மாற்றி மாற்றி மொக்கை குடுத்தாங்க. பசங்க பண்றதுல பொண்ணுங்களுக்கு பிடிச்சது, ஸீன் போடுவது ஏன். பெண்கள் ஆண்களை திரும்பிப் பார்க்க பண்ண வேண்டியதுன்னு காலேஜ்ல ஹிரோ ஹிரோயின் ஆக என்ன என்ன வழிகள் அப்படிங்கற அளவுக்கு செம கலக்கல் நிகழ்ச்சி. டாப் டக்கர். கோபிக்கு ஒரு ஸ்பெசல் "ஓ".

புதுவரவு : இதுவும் விஜய் தொலைக்காட்சில தான் "லிட்டில் ஜீனியஸ்". பள்ளி மாண்வர்களுக்கு ஏற்ற அருமையான நிகழ்ச்சி. கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லி நானும் மகிழ்ந்தேன் "ஒன்னுமே தெரியல". இதன் தொகுப்பாளரும் நல்லா நிகழ்ச்சிய நடத்துகிறார் ஆனா ஆங்கிலம் கொஞ்சம் புரியர மாதிரி பேசலாம். ஆனா அதுக்கும் டக் டக்னு பதில் சொல்லுதுங்க "லிட்டில் ஜீனியஸ்".

இந்த வாரம் இவ்வளவு தான் மீண்டு இதே மாதிரி ஒரு நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம் அது வரை நன்றி வணக்கம்.
என்ன தான் புதுசு புதுசா நிறைய பேர் வந்தாலும் நம்ம பெப்சி உமா சொல்லற "Keep trying Keep on trying better luck next time". இந்த டயாலாக்க மறக்க முடியாது. அவங்கள பாத்து சன் மியூசிக்ல வர மூக்கால பேசுற பொண்ணுங்க ரொம்பவே கத்துக்கனும்.இந்த மேட்டருக்கு ஒரு தனி பதிவே போடலாம்.

ஒரு பழமொழி ஒரு ரூபாய் :

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

இதில் ” நாளும்”, “இரண்டும்” என கூறிப்பிடப்படுவது எது ? கேள்விய திரும்பவும் சொல்ல முடியாது அதான் தெளிவா போட்டாச்சு இல்ல எழுத்துக்கூட்டி படிச்சு சரியான விடைய முழு நீள மஞ்சள் அட்டையில் எழுதுபவர்கள் அவற்றை தாங்களே வைத்துக்கொண்டு பதிலை மட்டும் பின்னூட்டம் இடு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ரம்யா நீ பொறந்துட்ட

முன்பெல்லாம் வரும் பிறந்தநாட்கள் என்றால் ஒரு இன்பமயமான அனுபவம். அப்போதைய தேதிகளில் பிரபலமான ரங்கிளா முதல் ஆரம்பம் ஆகி, வருடம் தோறும் புது புது உடை அணிந்து, அனைவரும் பள்ளியில் சீருடையில் வரும்போது நாம் தனித்துவம் பெறுவது பிறந்தநாளின் முழுமையை பூர்த்தி செய்து இருக்கும்.அன்றைக்கு எந்த டீச்சரும் அடிக்க மார்ட்டார்கள், திட்டமாட்டார்கள்.சாக்லேட் குடுப்பது முதல் வீட்டில் நடக்கும் அர்ச்சனைகள் இடம் மாறி கோவிலில் நடக்கும் போது நம்ம தான் அங்கே கெத்து.


காலையில் எழுந்து பக்கத்து வீட்டு அம்மாயி முதல் கைகுழந்தை வரைக்கு கேக் குடுத்து பிறந்தநாள் மொய் வசூல் செய்து "இது என்னோட காசு, எனக்கு புது பேக் வாங்கி தரனும்" என்று கர்வமாக அம்மாவிடம் சொல்லும் நேரம் ஏனோ இப்போதைய வெறுமையை விரட்ட கண்முன் வந்து செல்கிறது.

ஒரு பத்து பதினொறு வயசுல எல்லாம் "எப்பம்மா நான் காலேஜ்க்கு போவேன் அக்கா மாதிரி, இன்னும் எத்தன பொறந்தநாள் வரனும்"னு கேட்பேன்.கை ஓடிய HW எழுதி அலுத்துப்போன எல்லாம் பொடுசுங்களும் இந்த மாதிரி தான் நினைக்கும் போல. இப்படி எனக்கு பத்து வயசுலயே காலேஜ்னா, படிக்கவே வேண்டாம் ஓரே ஜாலி தானு எண்ணம்.

எப்படியோ காலேஜ் வந்த அப்போ கேண்டின்ல டிரிட் வெச்சு பர்ஸ் பழுத்துப்போய் வீட்டுக்கு போகும் போது எப்படா நாலு காசு சம்பாதிப்போம்னு ஒரே எண்ணமா இருக்கும். அப்படி மட்டும் சம்பாதிச்சா நம்ம நட்பு வட்டாரத்த ராயப்பாஸ் கூட்டிட்டு போய் அலப்பர பண்ணிடனும்னு நினைப்பேன்.

இப்போ சாம்பாதிக்கும் போது Leave Balance, LOP, project நு பல பல பிரச்சனை வீட்டுக்கே போக முடியாத நிலைமை.என்ன தான் அடுத்த அடுத்த பிறந்தநாள் வந்தாலும் அலுத்துப்போய் கொண்டாடின முந்தைய பிறந்தநாளுக்குரிய சிறப்பு இல்லனு தான் தோனுது.

பிறந்தநால் பரிசு என்ன என்ன வரும்னு ஒரு கனவே இருக்கும். சில பல தோழிகளுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லும்போது தான் பழைய நினைப்பை புரட்டிட்டு போவாங்க.இப்போ பல போருக்கு நான் எந்த ஊர்ல இருக்கேனு தெரியுமானு தெரியல.

"உனக்கு கல்யாணம் பண்ணனும்"னு சொல்லும்போது தான் அக்கா, அண்ணனனுங்க கல்யாணத்துல கல்யாண பொண்ண பார்த்துட்டு "அம்மா அக்கா புடவை கலர்ல எனக்கும் ஒரு பட்டுப்பாவாட வேணும். அதே மாதிரி நிறை நகையை எல்லாம் வேணும்"னு சொன்னது நியாபகம் வருது.

ஆனா இப்போ நகை விலைய பார்த்தா ரொம்ப பயமா இருக்கு. ஒவ்வோரு வயசு ஏறும் போது அறிவு வளருதோ இல்லையோ பயம் அதிமாகிட்டே போகுது. சின்ன பிள்ளையாவே இருந்திடலாம் போல.எது எப்படியோ வாழ் நாள்ல ஒரு வருசம் குறையுதேனு சந்தோஷ பட்டுக்கலாம்.

இந்த வருஷத்துல எனக்கு தமிழ்நாட்டு பக்கத்தில மாத்தல் மட்டும் கிடைக்கல அடுத்த பிறந்தநாளுக்கு நான் சும்மா உட்காந்து பதிவு மட்டும் போட்டுட்டு இருக்க மாட்டேன்.

எப்ப நம்ம அக்கா பொண்ணுங்களும், அண்ண பயன்களும் சித்தி அத்தைனு கூப்பிடுதோ நமக்கே லைட்டா வயசான மாதிரி தோனுது. எனக்கும் இப்போ அப்படி தான் தோனுது. ஏனா கமென்ட்ல போடற மாதிரி +1 ஆகுது இல்ல. :P:P

சன்டேல அந்த நல்ல நாள் வரதுனால ஸ்வீட் அட் மை டெஸ்க் டிஸ்யூ அட் மை CPUநு மெயில் அனுப்பி அலப்பர பண்ணி புரியாத பாஷைல கஷ்டப்பட்டு கும்மி அடிக்க வேண்டாம். நம்ம நட்பு வட்டாரம் சிக்கன் பிரியாணி செஞ்சு வீட்ல அசத்துறதா இருக்காங்க. சோ ஒரு கட்டு கட்டிட்டு கண்ணு முண்ணு தெரியாம தூங்கினா போதும்னு இருக்கு.

ரசிகர் பெருமக்களுக்கு நன்றி. ஏனா இந்த பதிவ(தலைப்ப) படிக்கிறீங்களோ இல்லையோ புடிச்சதோ இல்லையோ எதையுமே சொல்லாமா அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து ஆடினரி வாழ்த்து ஸ்பெசல் சாதானு கமெண்ட் போட்டு அதுக்கு +1 போட்டு கும்மி அடிப்பீங்கனு தெரியாததா. நம்மளும் இந்த பொது வாழ்க்கைல இதத்தான செய்யுறோம்.

ஊடல்

ஊடல்



சங்கிலி தொடருக்காய் கவிதை எழுத
காதல் பக்கங்களை புரட்டியபோது
தெரிகிறது-
பிரிந்த காதலனின் முகம்,
மெல்லிய புன்னகையை தாங்கி!
"மன்னிப்பு கேட்டுவிடலாமே" என்று
அவன் இடத்திற்கு நடக்கலானேன்!
"மன்னிப்பு கேட்கட்டுமே" என்று
பாதி வழியில் திரும்புகிறேன்
அவனை நோக்கி நடந்த
என் நிழலைவிட்டு - மீண்டும் ஊடல்.



கனக்கும் காதல் கணங்கள்

கனக்கும் காதல் கணங்கள்

உன்னுடன் சண்டையிட்டு
வீடுத்திரும்பும் நான்
தேடியெடுப்பதென்னவோ
"இதை வைத்திரு" என்று
நீ என்னிடம் கொடுத்த
காலாவதியான
ரசீதைத் தான்.
சண்டையின் சூட்டில்
ஒரு துளி கொண்டு
என்னை நனையவைக்கும்
நம்பிக்கை நிமிடங்களில்
கையில் ரசீதுடன் - உன்
அழைப்பிற்காக காத்திருக்கின்றேன்.
எதிர்ப்பார்த்தபடியே -
"அந்த முக்கியமான ரசீது-
உடனடியா வேணும்" என்ற
பரிதாபமான பாசாங்கில்
மீண்டும் ஒருமுறை
காலாவதியாகிப்போகிறது
ரசீது - புதுப்பிக்கப்படுகிறது
காதல்!!!

Friday, December 18, 2009

ஹைக்கூ

கிழிந்துப் போன ரூபாய் நோட்டுகளிடையே
அழகான வெள்ளி நாணயம்
குழந்தையின் சிரிப்பு!!!!
***
வெறும் பாறையையும், சிரிக்கும் சிற்பமாக்கும்
சிற்பியின் கைவண்ணம்
காதல் !!!
***
விளையாட்டுத் தனமாக குழந்தை
தீட்டிய ஓவியம்
நட்பு !!!!

கார்காலம் அது!!!

என் வாழ்க்கை
வெள்ளையாய்
வெழுத்திருந்தது
காதலை என்மேல்
எழுதினான் -
கண் இமைக்கும்பொழுதில்
கவிஞனான காதலன்.
அன்றெல்லாம்,
அவன் கண்களுக்கு
தென்பட்டிருக்கவே மாட்டேன்.
இன்றெல்லாம்,
அவன் கண்களுக்குதெரிந்த-
கடவுளானேன்.

என்னை விடாமல்
பார்த்துக்கொண்டே இருப்பான்.
இடையிடையில்
சிலசொற்களை வைத்துக்கொண்டு
வார்த்தைகளை வார்த்தெடுப்பான்.
வார்த்தைகளைக்கொண்டு
எப்படி எப்படியோ
வடிவம் கொடுப்பான் -
காதலுக்கு.
வாசிக்கப்படும்போது
பிண்ணனி இசையாக,
அங்கொன்று இங்கொன்றுமாய்
ஒன்றிரண்டு முத்தங்கள்.

வசந்தம்
கோடை
மழை
குளிர்
அனுபவித்து,
அவன் காதல்சுமந்து,
அவள் இல்லம்
நுழைந்தேன்.

அவன் திரித்த
காதலை,
நான்
விரித்து காட்டி
"ஏய் காதலி!
இதோ பார்,
உன் காதலன்
உவமைகளுக்குள்
உணர்ச்சிகளை
ஒளித்துவைத்திருக்கிறான்" என்பேன்.

என்மேல்
அவன் எழுதிவிட்ட
காதல் வார்த்தைகள்
அவள் வெட்கத்தில்
வர்ணம் பூசிக்கொள்ளும்.

அவள் என்னைப் படித்த
ஆயிரம் முறைக்கு
ஆயிரம் அர்த்தப்படும்
அந்த நான்கு ஐந்து வார்த்தைகள்.

காதலுக்காககாலம் களித்த
கடந்தகால கார்காலம் அது!!!
- நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு
காலாவதியான காதல் கடிதங்கள் நான்.