என் வாழ்க்கை
வெள்ளையாய்
வெழுத்திருந்தது
காதலை என்மேல்
எழுதினான் -
கண் இமைக்கும்பொழுதில்
கவிஞனான காதலன்.
அன்றெல்லாம்,
அவன் கண்களுக்கு
தென்பட்டிருக்கவே மாட்டேன்.
இன்றெல்லாம்,
அவன் கண்களுக்குதெரிந்த-
கடவுளானேன்.
என்னை விடாமல்
பார்த்துக்கொண்டே இருப்பான்.
இடையிடையில்
சிலசொற்களை வைத்துக்கொண்டு
வார்த்தைகளை வார்த்தெடுப்பான்.
வார்த்தைகளைக்கொண்டு
எப்படி எப்படியோ
வடிவம் கொடுப்பான் -
காதலுக்கு.
வாசிக்கப்படும்போது
பிண்ணனி இசையாக,
அங்கொன்று இங்கொன்றுமாய்
ஒன்றிரண்டு முத்தங்கள்.
வசந்தம்
கோடை
மழை
குளிர்
அனுபவித்து,
அவன் காதல்சுமந்து,
அவள் இல்லம்
நுழைந்தேன்.
அவன் திரித்த
காதலை,
நான்
விரித்து காட்டி
"ஏய் காதலி!
இதோ பார்,
உன் காதலன்
உவமைகளுக்குள்
உணர்ச்சிகளை
ஒளித்துவைத்திருக்கிறான்" என்பேன்.
என்மேல்
அவன் எழுதிவிட்ட
காதல் வார்த்தைகள்
அவள் வெட்கத்தில்
வர்ணம் பூசிக்கொள்ளும்.
அவள் என்னைப் படித்த
ஆயிரம் முறைக்கு
ஆயிரம் அர்த்தப்படும்
அந்த நான்கு ஐந்து வார்த்தைகள்.
காதலுக்காககாலம் களித்த
கடந்தகால கார்காலம் அது!!!
- நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு
காலாவதியான காதல் கடிதங்கள் நான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment